4. விநய பாடம்
1. எண்வினை மாய்த்த ஜிநேந்திரரே!
யாவரும் போற்றற் குரியவரே!
எண்ணுறும் பூஜையை யான்புரிய
இயம்பும் ஆகம விதிப்படியே
புண்ணிய காரண மாதலினால்
பொற்புற அமைய நின்றபடி
பண்ணெழ விநயப் பாடமதை
பக்தியின் முதலில் பாடுவனே!
2. கடையில் காட்சி ஞானமுடன்
கனம்பொரு வீரியம் சுகம் என்னும்
படிறில் செல்வம் நான்கிற்கும்
பகவான்! நீரே அதிபதியாம்
தடையில் இன்பம் தருமுக்தி
தையல் தனக்கும் முப்புவிக்கும்
முடிகேழ் தலைவர் நீரன்றோ?
மொழிவதில் ஏதும் பகையுண்டோ?
3. மன்னிய கீழ்நடு மேலுலகின்
மன்னுயிர் துன்பம் தொலைத்தவரே!
துன்னிய பிறவிச் சுழல்பாயும்
தொலையாக் கடலைத் தூர்த்தவரே!
முன்னிய முக்தி தரும்மின்பம்
மூவா தளிக்கும் முனைவோரே!
இன்னல் தரும்வினைக் காட்டினையே
ஈடில் தவத்தால் எரிப்பவரே!
4.அனந்த மாகிய குணவமுதம்
ஆரத் துய்க்கும் அனகர்நீர்
இனையும் பாவ விருள்தன்னை
இரியச் செய்யும் பரிதியும்நீர்
காசினி முழுதும் போர்ப்பவர்நீர்
முடிவில் முக்தி சுகம்கூட்டும்
மூவா வுலகின் தலைவரும்நீர்!
5. பகவான்! உந்தன் உளமெல்லாம்
பவித்திர அறவமு தம்நிறையும்
இகவாக் கருணை நீர்மேகம்
எனவே வுலகம் உமைப்போற்றும்
சுகமார் ஞானச் சூரியரே!
சுந்தர மரைபா தத்தவரே!
பகையில் முப்புவி வேந்தரெலாம்
பாதம் தொழவரும் பகவானே!
6. தூய மனம்மொழி செயலாலே
தூயவரே! உமை வணங்குகிறேன்
ஆய வினையெனும் முடிச்சுதனை
அவிழச் செய்யும் வல்லபரே!
காயும் கருமக் காட்டினின்றே
காப்பவர் உம்மின் வேறுளரோ?
சேயென உம்முன் நிற்கின்
றேன் சேரக் காப்பீர் எம்மானே!
7 . சமுசார ரக்கடல் தனினின்றே
சழக்கரை யேற்றுதல் நும்பதமே
அமுத ரசம்சொரி ஆன்மீக
தமக்கு அடைக் கலமில் எளியோரைத்
தாயெனக் காப்பவர் நீரன்றோ?
விமலரே!நும்பதம் தொழுகின்றேன்
வினைப்புயல் அடக்கும் வரமருள்வீர்!
8. வினைத்தூ சுடன்பொலி ஆன்மாவை
விமல மதாய்செய் ததன்பிறகே
நினையும் அனந்த குணம்பெறவே
நிருமல நெறிதனைக் காட்டுவிரே!
இனையும் இடராம் கடல் நின்றே
ஏறிடும் வழியை எளிதாக
உமைப்போல் சொல்பவர் யாரையா?
உலகம றிந்த உத்தமரே!
9. உந்தம் திருவடித் தாமரையை
உள்ளன் புடனே நினைவார்தம்
வெந்தழ லனைய பிறவிகள்தாம்
வெருவியே துன்புற் றோடிடுமே
நிந்திக் கும்பகை வரும் கூட
நெருங்கிய நட்பினர் ஆகிடுவார்
முத்துயிர் போக்கும் விஷம்கூட
மூவா அமுதம் ஆகிடுமே!
10. பாவிய ராகும் பதடியரைப்
பகவனே! நீரவர் தமைத்திருத்தி
ஓவில புண்ணிய ராக்கிடுவீர்
ஒப்பில் அஞ்சன சோரனைப்போல்
தாவுறும் மிச்சையர் தமைக்கூட
தகுமற பாதையில் திருப்பிடுவீர்
மேவுறும் நும்மறம் வாழ்கவெனா?
அடியேன் அன்புடன் வாழ்த்துவனே!
11. கனகரே! உமைவழி படுவதனால்
காலாந் தரத்தே அரசர்களாய்
புனையும் விஞ்சையர் வீரர்களாய்
புவிபுகழ் இந்திர ராகிடலாம்
இனைவுறு பாபங்களும் அகலும்
இயம்பரும் மோட்சமும் தான்கிடைக்கும்
ஜினரே! நீரொரு கற்பகமே
சேர்ந்தார்க் குதவும் அற்புதமே!
12. நீரில் லாத கயத்தினிலே
கிடந்தே துடிக்கும் மீனானேன்
பாரில் மாந்தர் பிறப்பாதி
படரும் படரினை நீக்கவல்ல
நேராம் நன்னெறி காட்டுவீரே
நிகளம தாம்பற் றற்றிடவே
தாரணி முக்குடை நிழலமர்ந்தீர்
தன்னிய ராகிட அருள்தாரீர்!
13. இறையே! இடர்சேர் பிறவியெனும்
இருங்கட லலையும் படகானேன்
முறையாய் கலங்கரை ஒளிகாட்டி
மூழ்க விடாமற் கரைசேர்ப்பீர்
சிறையாய் பாசக் கயிறதனைச்
சீக்கிர மாகத் துணித்திடுவீர்
உறுவா! நீரொரு படகோட்டி
உயிர்களைக் காக்கும் வழிகாட்டி
14. ஆசை வலையிற் சிக்குண்டே
அவதிக ளுற்றேன் பலகாலம்
நீசச் செயல்புரி தேவர்களின்
நிழலி லொதுங்கித் துன்புற்றேன்
மாசில் நற்குண மாதவரே!
மலரடி தரிசனம் கண்டுய்ந்தேன்
பூசல் வினைத்துயர் வலையறுத்தே
புல்லிய னென்னை மீட்டிடுவீர்!
15. எத்துணை பவங்கள் நிகோதத்தும்?
எத்துணை பவங்கள் நரகத்தும்?
எத்துணை பவங்கள் விலங்கினத்தும்?
இருந்தபின் ஏதோ நல்வினையால்
இத்தரை மீதினில் மானிடனாய்
எடுத்தேன் பிறவி எண்குணரே!
அத்தரே! உம்மை தரிசித்தே
அடைக்கல மானேன் திருவடியில்
16. மணியொளி சிந்தும் மகுடத்து
மாகத் திந்திரர் பவணேந்தரர்
அணிஎழில் அரியணை வீற்றிருக்கும்
அரசர்க் கரசரும் அடியேத்திப்
பணிவுடன் பூசனை செய்கின்ற
பரமரே! உம்மை தரிசிக்கும்
பிணக்கில வாம்நற் பேற்றினையே
பெற்றேன் பிறவி பிழைத்தேனே!
17. திக்கில வர்க்கே அடைக்கலமாய்
தீனர்க ளுக்கே உறைவிடமாய்
பக்குவ மாம்நன் னெறிகாட்டும்
பரமாத் துமரே! நீரன்றோ?
மிக்கலை சூழ்பிற விக்கடலில்
மீதே நீந்தும் எம்போன்ற
ஒக்கலுக் குதவும் ஓடமென
உதவிடும் கருணா கரர்நீயே!
18.பாடிடும் பைந்தமிழ் வாணர்களும்
பகவான் திவதொனி யைமொழியும்
நீடிசை ஞானக் கணதரரும்
நெடுமுடி இந்திரரும் சேர்ந்தார்
சேடுப டும்ஜின வரர்நுமையே
சிறியேன்பாடிடத் தரமாமோ?
கேடில எண்குணக் குன்றே! நும்
கிளரிசை ஒளிதனைத் தந்தருளே!
19. உம்முடை தரிசனத் தாலேயே
உயிர்க ளெலாம்பவக் கடல்தாண்டும்
மம்ம ருளத்தேன்அரற்றுவனே
எம்ம ருங்குந்தன் திருநோக்கை
இதமுற காட்டிக் கரைசேர்ப்பீர்
உம்மால் மட்டுமே எளியேனை
உய்யச் செய்திட இயலுமையா!
மாய பவக்கடல் மூழ்கியுள
20. என்னுள் குமையும் வேதனையை
யாரிட மெடுத்துக் கூறுவனோ?
அன்னிய ரெவரும் நீக்ககிலார்
ஆதலின் உந்தன் அருள்நோக்கம்
என்மேல் படுமென் நம்பிக்கை
இதயத் துள்ளே வேர்விடுமே
இன்னல் யாதும் எய்தாமல்
எம்மானே! உமைச்சர ணடைந்தேன்
21. கணதர ரேத்திய கண்மணியைக்
கைகள் கூப்பி வணங்குகிறேன்
குணக்குன் றான ஐந்துமகா
குரவர் பதமே வணங்குகிறேன்
சூழும் சுத்தாத் துமப்பிரபுவே!
வணக்கம் செய்தேன் இடையூறு
வரவொட் டாமல் காத்திடுவீர்.
22. அறுநால் தீர்த்தரை வணங்குகிறேன்
ஆகம மொழிவடி வாயமைந்த
மனங்குளிர்ந் திடவே வணங்குகிறேன்
புங்கவர் யதிகளை வணங்குகிறேன்
இறுதியில் சுகமே அளிக்கவல்ல
இத்துதி மாலையை அமைக்கின்றேன்
23. மாண்புறும் ஐம்பெரும் பரமேட்டி
மங்கல வடிவொடு திகழ்பவரே
காண்குறும் நாள்கள் எல்லாமும்
கனிவுட னவர்களைத் தியானிப்பேன்
பூண்டிடும் அருளுரு வானவரே!
பூமிசை யேகும் புண்ணியரே!
வேண்டுவன் உம்மை அசுபமெலாம்
விரைவினில் ஒழிகென் றடிபணிந்தேன்
24. ஜின்பக வானே உம்முடைய
செவ்விய மங்கல அடிபணிவேன்
ஜினவரர் யாவரும் யாவர்க்கும்
செவ்விய மங்கலம் செய்பவராம்
வினைமுழு தழித்தே வீடுற்ற
விமலர் சித்தர் யாவரையும்
இனியவாம் மங்கலம் யான்பெறவே
என்றும் என்றும் வணங்குகிறேன்.
25. திகம்பர கோலத் துடன்திகழும்
தெருளுடை ஆசாரியர் மற்றும்
பகவில சுருத நாயகராம்
பரிவின் னுவாத்தி மார்களையும்
சுகமுறும் முக்தி நெறிகாட்டும்
சுத்தாத் துமராம் முனிகளையும்
இகலில மங்கல வடிவினராம் இவரையும்
வேண்டுவன் மங்கலமே.
26. அருகரே! நின்திரு வமுதமொழி
அருவுரு வாணியும் மங்கலமாம்
இரியாத் திருவறம் மங்கலமாம்
இவற்றை அடைந்துள ஜினவரரே!
பருவர லூட்டும் அசாதாவென்
பகரும் வேத நீயமதைச் சரியச்
சமையச் செய்வீர் என்றனையே!
27. நற்பவ் வியராம் நாதூராம்
நன்றுற வாக்கிய இப்பாடல்
போற்றி படிப்பவர் தாமுளரேல்
உற்றெழு பிறவிக் கடலேற
பொற்புற மங்கலம் ஈந்திடுமே
ஓட மெனத்திகழ் இக்கவிதை
கற்பவர் கேட்பவர் யாவருமே
கடையில் இன்பம் உறுவாறே!
(கவி நாதுராம் இந்தியில் இயற்றியதன் தமிழாக்கம்)